டெங்கு தகவல் தாள்

​​டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்ட கொசுக்களால் டெங்கு வைரஸ் மக்களுக்குப் பரவுகிறது. டெங்கு வைரஸ் தொற்று (டெங்கு காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது) கடுமையான காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளது. இந்த வைரஸ் மற்றும் அதைப் பரப்பும் கொசுக்களின் வகைகள் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல நாடுகளில் காணப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் தொற்று ஏற்படுவதை தடுக்க கொசுக் கடிக்கு உள்ளாவதை தவிர்க்க வேண்டும்.

டெங்கு என்றால் என்ன?

டெங்கு என்பது நான்கு வகை டெங்கு வைரஸ்களில் ஒன்றால் (DENV-1,
DENV-2, DENV-3 மற்றும் DENV-4) ஏற்படும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். டெங்கு வைரஸ் இரண்டு வகையான கொசுக்களால் பரவக்கூடும்:

  • டெங்கு கொ​சு (Aedes aegypti)
  • மற்றும் ‘ஏசியன் டைகர் (Aedes albopictus)
  • டெங்கு நோய் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களையும் பாதிக்கிறது.

டெங்குவின் அறிகுறிகள் என்ன?

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கடுமையான சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உட்பட பின்வருபவை தோன்றக்கூடும்:

  • திடீர் காய்ச்சல்
  • குளிர் நடுக்கம்
  • கண்களுக்குப் பின்னால் வலியுடனான கடுமையான தலைவலி
  • வீங்கிய சுரப்பிகள்
  • தசை மற்றும் மூட்டு வலி
  • கடும் சோர்வு
  • வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி
  • மூன்றாம் நாளில் உடலின் மேல்பகுதியில் லேசான சிவப்பு நிற தோல் அழர்ச்சி சில நேரங்களில் தோன்றும்.

குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களில் அறிகுறிகள் வேறுபடக்கூடும். தொற்றுக்குள்ளான கொசு கடித்ததற்குப் பின், அறிகுறிகள் 3 முதல் 14 நாட்களுக்குள் (பொதுவாக 4 முதல் 7 நாட்கள்) தோன்றலாம்.
காய்ச்சல் சாதாரணமாக சுமார் 6 நாட்கள் நீடிக்கிறது.
கடுமையான டெங்கு காய்ச்சல் அரிதாகவே ஏற்படும், ஆனால் கீழ்க்கண்ட சிக்கல்கள் ஏற்பட்டால் உயிரிழப்புக்கு வழிவகுக்கும்:

  • பிளாஸ்மா கசிவு (இரத்த பிளாஸ்மா அசாதரணமாக அருகிலுள்ள திசுக்களுள் நுழைவது)
  • திரவ தேக்கம்
  • சுவாசக் கோளாறு (உடலிற்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமை)
  • தீவிர இரத்தப்போக்கு
  • உடலுறுப்புகளின் வலுக்குறைதல் (உடலுறுப்புக்கள் சீராக இயங்காமல் போதல்)

கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகளாக முதல் தொற்று அறிகுறிகள் தோன்றிய 3-7 நாட்களுக்குப் பிறகு, காய்ச்சல் குறைவதோடு
(38°C க்கும் குறைவான வெப்பநிலை), பின்வருவனவும் அடங்கும்:

  • கடுமையான வயிற்று வலி
  • விரைவான அல்லது வேகமான சுவாசம்
  • வாந்தியில் இரத்தம்
  • தொடர்ச்சியான வாந்தி
  • ஈறுகளில் இரத்தப்போக்கு
  • சோர்வு, மன உளைச்சல்.

இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள் அல்லது அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லுங்கள்.

டெங்கு எவ்வாறு பரவுகிறது?

வைரஸால் பாதிக்கப்பட்ட கொசுவால் கடிக்கப்பட்ட பின்னர் மக்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.

டெங்கு வைரஸை தனது இரத்தத்தில் கொண்டிருக்கும் ஒருவரைக் கொசு கடிக்கும்போது அந்த கொசு தொற்றுக்குள்ளாகிறது.
வைரஸ் அந்த கொசுவின் உடலுக்குள் வளர்ந்து, பின்னர் அந்த கொசு மற்றவர்களை கடிக்கும்போது, அவர்களுக்கும் வைரஸ் பரவுகிறது.
டெங்கு வைரஸ் உள்ள கொசு ஒருவரை கடித்த பின் அந்த நபரின் இரத்தத்தில் டெங்கு வைரஸ் 3 முதல் 14 நாட்கள் வரை இருக்கக்கூடும்.

இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகப் பரவாது. டெங்கு காய்ச்சல் சில சமயங்களில் இரத்தமாற்றம், திசு அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, ஊசி குத்தல் காயங்கள் அல்லது டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்ட இரத்தத்துடன் உள்ள சளி சவ்வு தொடர்பு மூலம் பரவுகிறது.

டெங்கு ஏற்படும் அபாயம் உள்ளவர்கள் யார்?

டெங்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்பவர்களுக்கு இத்த நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. டெங்கு வைரஸ் மற்றும் அதைப் பரப்பும் கொசுக்களின் வகைகள் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றன.

மத்திய மற்றும் தூர வடக்கு குயின்ஸ்லாந்து (டெங்கு கொசு காணக்கூடிய இடம்) மற்றும் டோரஸ் ஸரேயிட் (ஏசியன் டைகர் கொசுவைக் காணக்கூடிய இடம்) தவிர ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் டெங்கு வைரஸைப் பரப்பக்கூடிய கொசுக்கள் இல்லை. வெளிநாட்டில் தொற்றுக்குள்ளான ஒருவர் உள்ளூர் ஏசியன் டைகர் கொசு அல்லது டெங்கு கொசுவால் கடிக்கப்படும் போது, அந்த கொசுவினால் வைரஸ் மற்றவர்களுக்கு பரப்பப்படும் போது குயின்ஸ்லாந்தின் இந்த பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக அந்த குறிப்பிட்ட வகை டெங்கு வைரஸுக்கு நீண்டகால நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்கிறார்கள், ஆனால் மற்றைய வகை டெங்கு வைரஸ்களால் பாதிக்கப்படும் அபாயம் இருந்துகொண்டே இருக்கும்

டெங்கு எவ்வாறு தடுக்கப்படுகிறது?

ஆரம்பநிலை டெங்கு தொற்றைத் தடுக்க தற்போது தடுப்பூசி இல்லை.

Dengvaxia®️ மூலம் மேலும் தொற்றுகள் (இரண்டாம் நிலை தொற்று என்றும் அழைக்கப்படுகிறது) ஏற்படுவது தடுக்கப்படலாம், இருப்பினும் இந்த டெங்கு தடுப்பூசி கண்டிப்பான தகுதி அளவுகோல்களைக் கொண்டுள்ளது.
தடுப்பூசி குறித்து உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.

கொசுக்களின் கடியிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள, பின்வரும் நடைமுறைகளை பின்பற்றவும்:

வெளிர் நிற, நீண்ட கை சட்டைகள், நீண்ட காற்சட்டை மற்றும் மூடப்பட்ட காலணிகளை அணியுங்கள். கொசுக்கள் இறுக்கமான ஆடைகளுக்குள்ளும் கடிக்கக்கூடியவை.

பிகாரிடின், DEET அல்லது எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெய் கொண்ட கொசு விரட்டியை, வெளியே தெரியும் அனைத்து தோல்பகுதிகளிலும் சீராக தடவிக்கொள்ளுங்கள் இயற்கையான அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட கொசு விரட்டிகள் கொசுக்களிடமிருந்து உங்களைப் பாதுகாப்பதற்கு சிறந்தவை அல்ல. கொசு விரட்டியை எவ்வெப்பொழுது மீளப்பயன்படுத்த வேண்டும் என்பதைக் கண்டறிய உபயோகிக்கும் வழிமுறைகளைப் படியுங்கள். எப்போதும் முதலில் சன்ஸ்கிரீனையும் பின்னர் கொசு விரட்டியைப் பயன்படுத்துங்கள்.

கொசுக்கள் அதிகமாகக் கடிக்கும் நேரங்களில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

வீட்டைச் சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றவும், ஏனெனில் அவை கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாக மாறக்கூடும்.

கொசு வலைகள், ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கான திரைகளைப் பயன்படுத்தவும்.

வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அல்லது ஆஸ்திரேலியாவில் டெங்கு கொசுக்கள் அதிகமாகக் காணப்படும் பகுதிகளுக்குச் செல்லும்போது, நீங்கள் செய்ய வேண்டியவை:

  • திரையிடப்பட்ட ஜன்னல், கதவு உள்ள அல்லது குளிரூட்டப்பட்ட அறைகளில் தங்கி உறங்குங்கள்.
  • தூங்கும் இடம் வெளிப்புறமாக இருந்தால், கொசு வலையைப் (mosquito bed net) பயன்படுத்தவும். பயனுள்ள கொசு வலைகள் பொதுவாக permethrin (பெர்மத்ரின்) போன்ற pyrethroid (பைரித்ராய்ட்)வகை பூச்சி நாசினியால் தடையூட்டப்பட்டிருக்கும்.
    தடையூட்டப்பட்ட வலைகளை பயணத்திற்கு முன்னரே வாங்கலாம், அல்லது வாங்கிய பின் தடையூட்டலாம்.
  • கொசுக்கள் அதிகமாகக் கடிக்கும் நேரங்களில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். ‘ஏடிசு எகிப்தி’ (Aedes aegypti) போன்ற சில வகை கொசுக்கள் நாள் முழுவதும் கடிக்கும்.
  • கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகமாக உள்ள பகுதிகளிலிருந்து அல்லது பரவல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் இருந்து விலகி இருங்கள்.

டெங்கு எவ்வாறு கண்டறியப்படுகிறது?

உங்கள் மருத்துவர் இரத்த மாதிரியை எடுத்து டெங்கு வைரஸுக்கு பரிசோதிக்க முடியும். சமீபத்திய தொற்றுநோயை உறுதிப்படுத்த இரண்டாவது இரத்த பரிசோதனையும் தேவைப்படலாம்.

டெங்குவிற்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. நோயாளிகள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும், நிறைய ஓய்வெடுப்பதுடன் ஏராளமாக திரவங்களை அருந்தவேண்டும்.
காய்ச்சல் மற்றும் மூட்டு வலிக்கு பாராசிட்டமால் (Paracetamol)மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால், அஸ்பிரின் (Aspirin) மற்றும் ஐபுரோஃபென் (Ibuprofen) போன்ற மருந்துகளை தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவை இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

கடுமையான டெங்கிற்கு உடனடி மருத்துவக் கவனிப்பும் மருத்துவமனையின் உன்னிப்பான கண்காணிப்பு மற்றும் சிகிச்சையும் தேவை.

பொது சுகாதாரத்தின் நடவடிக்கை என்ன?

ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை ஆய்வகங்கள் உறுதி செய்யும் போது, அந்த தகவலை தங்கள் உள்ளூர் பொது சுகாதாரப் பிரிவுக்குத் தெரிவிக்கின்றன. பொது சுகாதாரப் பிரிவுகள், அந்த நபருக்கு எங்கு தொற்று ஏற்பட்டது என்பதைத் தீர்மானிக்க ஒவ்வொரு நோயாளியுடனும் பேசுகின்றன. குறைந்த ஆபத்துள்ள பகுதிகளில் நோய் பரவுகிறதா என்பதைக் கண்டறியவும், பரவலைத் தடுக்கவும் இந்தத் தகவல் முக்கியமானது.

மேலதிக வளங்கள்

உங்களுக்கு டெங்கு அறிகுறிகள் இருப்பதாக எண்ணினால் உடனடியாக உங்கள் மருத்துவருடன் பேசுங்கள்,அல்லது
அவசர நிலை ஏற்பட்டால் (000) மூன்று பூஜ்ஜியங்கள் என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும்.

மேலதிக ஆலோசனைக்கு, இலவச மற்றும் ரகசிய மொழிபெயர்ப்பு மற்றும் உரைப்பெயர்ப்பு சேவையை (TIS) 131
450 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கவும்.
உங்கள் மொழியை சொல்லி நீங்கள் பின்வருபவர்களுடன் பேசவிரும்புவதாக கூறுங்கள்:

  • 1300 066 055-இல் உங்கள் உள்ளூர் பொது சுகாதாரப் பிரிவு
  • இலவச 24 மணி நேர சுகாதார ஆலோசனைகளுக்கு 1800 022 222-இல் Healthdirect-ஐ தொடர்புக்கொள்ளவும்
  • அல்லது, உங்கள் உள்ளூர் மருந்தக மருந்தாளரிடம் பேசவும்.

டெங்குவைத் தடுப்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு பின்வருபவற்றை பார்வையிடவும் :


Current as at: Friday 19 December 2025
Contact page owner: One Health