ஹெபடைடிஸ் A (Hepatitis A) தகவல் தாள்

ஹெபடைடிஸ் A என்பது கல்லீரலை பாதிக்கும் வைரஸ் தொற்றாகும்.  இந்த வைரஸ், மாசுபட்ட உணவு அல்லது தண்ணீர் உட்கொள்ளும் போது, அல்லது தொற்றுற்ற நபருடன் நேரடி தொடர்பு ஏற்படுவதன் மூலம் பரவுகிறது.  தடுப்பூசி மற்றும் நல்ல சுகாதார பழக்கவழக்கங்கள் இந்த தொற்றைத் தடுக்க உதவுகின்றன.

Last updated: 18 December 2025

ஹெபடைடிஸ் A என்றால் என்ன?

‘ஹெபடைடிஸ்’ என்பது கல்லீரலில் உண்டாகும் அழற்சி அல்லது வீக்கம் என்பதை குறிக்கும்.  இது இரசாயனங்கள், மருந்துகள், அல்லது பல்வேறு வகையான வைரஸ் தொற்றுகள் காரணமாக ஏற்படக்கூடும்.

ஹெபடைடிஸ் A வைரஸ் என்பது ஹெபடைடிஸ் வகைகளின் ஒன்றாகும்.  ஒரு வகையான ஹெபடைடிஸ் வைரஸால் ஏற்படும் தொற்று, மற்ற வகையான ஹெபடைடிடிஸ் வைரஸ்களிலிருந்து பாதுகாப்பு வழங்காது.  ஆஸ்திரேலியாவில் ஹெபடைடிஸ் A பொதுவானதல்ல. பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாகிறார்கள்.

ஹெபடைடிஸ் A அறிகுறிகள் என்ன?

பின்வருபவை ஹெபடைடிஸ் A அறிகுறிகளாகும்:

  • உடல்நிலை சரியில்லாமல் இருப்பது
  • சோர்வு
  • காய்ச்சல்
  • குமட்டல்
  • பசியின்மை
  • வயிறு அசௌகரியம்
  • மூட்டு வலி (எப்போதாவது)
  • கடும் நிற சிறுநீர், வெளிர் மலம் மற்றும் மஞ்சள் காமாளை
    (கண் விழிகள் மற்றும் தோலின் மஞ்சள் நிறமாதல்).  மஞ்சள் காமாளை, கடும் நிற சிறுநீர் மற்றும் வெளிர் மலம்
    எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏற்படாது.

ஹெபடைடிஸின் அறிகுறிகள் பொதுவாக வைரஸுடன் தொடர்பு ஏற்ப்பட்ட நான்கு வாரங்களுக்குப் பின்னர் தோன்றும். சில நேரங்களில் அறிகுறிகள் இரண்டு முதல் ஏழு வாரங்களுக்கு இடையில் தோன்றும்.

இந்த நோய் பொதுவாக இலேசானதாக இருக்கும் மற்றும் ஒன்று முதல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும். கிட்டத்தட்ட அனைவரும் முழுமையாக குணமடைகிறார்கள்.

சிலர், குறிப்பாக நீண்டகாலமாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மிகவும் கடுமையான அறிகுறிகளை அனுபவிக்க நேரிடலாம். பாதிப்புக்குள்ளான சிறுவர்களுக்கு பொதுவாக எந்த அறிகுறிகளும் இருக்காது.

ஹெபடைடிஸ் A நீண்டகால கல்லீரல் நோயை ஏற்படுத்தாது, இந்த நோயால் மரணம் ஏற்படலாம், ஆனால் மிகவும் அரிதாகவே இடம்பெறுகிறது.  சில நேரங்களில், இந்த நோயிற்காக மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்படலாம்.  நோய் குணமானதாகத் தோன்றிய பிறகும், சிலருக்கு மீண்டும் மீண்டும் அறிகுறிகள் திரும்பி வரக்கூடும்.

ஹெபடைடிஸ் A எவ்வாறு பரவுகிறது?

ஹெபடைடிஸ் A வைரஸ் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நபரின் மலத்தில் (மலம்) காணப்படுகிறது. இந்த வைரஸ் சரியான சூழ்நிலையில் சுற்றுச்சூழலில் பல வாரங்கள் உயிர்வாழும்.

ஹெபடைடிஸ் A பொதுவாக ஒரு தொற்றுள்ள நபரிடமிருந்து வைரஸை மற்றொரு நபர் பின்வரும் பலவழிகளில் விழுங்கும்போது பரவுகிறது:

  • மாசுபட்ட  முற்றிலும் சமைக்காத, உறைநிலையிலுள்ள அல்லது முழுமையாக சமைக்காத உணவை உண்ணுதல்
  • மாசுபட்ட தட்ணீரைக் குடித்தல்
  • ஹெபடைடிஸ் உள்ள ஒருவரின் அழுக்கு நாப்பிகள், துணிகள் அல்லது துவாலைகளை தொடுதல்
  • பல் தேய்க்கும் தூரிகை போன்ற தனிப்பட்ட பொருட்களை பகிர்ந்து பயன்படுத்துதல்
  • ஹெபடைடிஸ் A உள்ள நபருடன் நேரடி தொடர்பு (பாலியல் தொடர்பு உட்பட)

ஹெபடைடிஸ் A தொற்று பரவல் பின்வரும் முறைகளில் கண்டறியப்படும்

  • நபருக்கு நபர் பரவுதல்
  • பாலியல் தொடர்பு குறிப்பாக
    ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிடையே
  • இறக்குமதி செய்யப்பட்ட உறைநிலை பழங்களை உட்கொள்வது
  • கழிவுநீரால் மாசுபட்ட தண்ணீரைக் குடிப்பது
  • மாசுபட்ட காய்கறிகள், பெர்ரி பழவகைகள் மற்றும் ஓடுள்ளகடல்உணவு போன்றவற்றை உண்ணுதல்
  • மாசுபட்ட உணவை உண்ணுதல்
  • குழந்தை பராமரிப்பு மையங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் சிறைச்சாலைகள்.

பாதிக்கப்பட்ட நபர்கள் வைரஸை மற்றவர்களுக்குப் பரப்பலாம்.  பொதுவாக அறிகுறிகள் தோன்றுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு முதல் மஞ்சள் காமாலை (கண் இமைகள் மற்றும் தோலின் மஞ்சள் நிறம்) வந்த ஒரு வாரம் வரை பரப்பலாம். அவர்களுக்கு மஞ்சள் காமாலை ஏற்படவில்லை என்றால், அறிகுறிகள் தோன்றிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு வைரஸைப் பரப்பலாம். இதற்குப் பிறகும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் வைரஸ் நீண்ட காலத்திற்கு மலம் மூலம் வெளிப்படுத்தப்படும்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் மக்களுக்கு, குறிப்பாக ஹெபடைடிஸ் A பொதுவாக உள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்குச் செல்லும் மக்களுக்கு ஹெபடைடிஸ் A தொற்று தொடர்ந்து ஒரு பிரச்சனையாக உள்ளது.

ஹெபடைடிஸ் A ஏற்படும் அபாயம் யாருக்கு உள்ளது?

ஹெபடைடிஸ் A, வைரஸால் இதுவரை தொற்றுக்கு உள்ளாகாதவர்கள் மற்றும்
இந்த வைரஸிற்கு எதிரான தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு இந்த நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஹெபடைடிஸ் A எவ்வாறு தடுக்கப்படுகிறது?

தடுப்பூசி

ஹெபடைடிஸ் A’-இற்கு எதிராக பாதுகாப்பான மற்றும் பயன்தரவல்ல தடுப்பூசி உண்டு.

தடுப்பூசி சிறந்த பாதுகாப்பை வழங்க இரண்டு வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் ஆகலாம். நீண்ட கால பாதுகாப்பிற்கு ஆறு மாத இடைவெளியில் இரண்டு தடவைகள் தடுப்பூசி போட்டுக்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.

வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு தொற்று ஏற்ப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசி கொடுக்கப்பட்டால், அதனால் அவருக்குப் பாதுகாப்பளிக்க முடியும்.

தொற்று ஏற்படும் அதிக அபாயமுல்ல பின்வரும் குழுக்களுக்கு தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது:

  • ஹெபடைடிஸ் A பொதுவாக உள்ள நாடுகளுக்கு (பெரும்பாலான வளரும் நாடுகள்) பயணிப்பவர்கள்
  • கிராமப்புற மற்றும் பூர்வீகக்குடி சமூகங்கள் வசிக்கும் தொலைதூர பிரதேசங்களுக்கு அடிக்கடி செல்பவர்கள்
  • பூர்வீகக்குடி சமூகங்களில் அல்லது சமூகங்களுடன் பணிபுரியும் சில சுகாதாரப் பணியாளர்கள்
  • சாக்கடைத் தொழிலாளர்கள்
  • குழாய்ப் பணியாளர்கள் (Plumbers)
  • ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள்
  • குழந்தை பராமரிப்பு மற்றும் முன்-பள்ளி ஊழியர்கள்
  • அறிவாற்றல் குறைபாடுள்ளவர்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்கள்
  • சட்டவிரோத மருந்துகளை (போதைப்பொருட்கள்) பயன்படுத்தும்/ஊசி போட்டுக்கொள்ளும் நபர்கள்
  • நீண்டகால கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்
  • தொடர்ச்சியாக இரத்தப்பொருட்கள் தேவைப்படும் இரத்தம் உறையாமல் நீண்ட நேரம் கசியும் நிலை (ஹீமோபீலியா) உள்ளவர்கள்.

ஹெபடைடிஸ் A-ஐ தவிர்க்க வேறு என்ன செய்ய முடியும்?

அனைவரும் எப்போதும் தங்கள் கைகளை சோப்பு கொண்டு ஓடும் நீரில் குறைந்தது 10 வினாடிகள் நன்கு கழுவி, சுத்தமான துவாலையினால் உலர்த்த வேண்டும்:

  • கழிவறைக்குச் சென்ற பின்
  • சாப்பிடுவதற்கு முன்
  • உணவு அல்லது பானம் தயாரிப்பதற்கு முன்
  • மாசுபட்ட  நாப்கின்கள் மற்றும் ஆணுறை போன்ற பொருட்களை கையாண்ட பின்.

இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த பழப் பொருட்கள் பல ஹெபடைடிஸ் A தொற்று பரவலுக்கு மூலாதாரமாக உள்ளன.  இந்தப் பொருட்களை உட்கொள்வதற்கு முன் சமைப்பது ஹெபடைடிஸ் A மற்றும் பிற சாத்தியமான உணவு மூலம் பரவும் தொற்றுகளின் அபாயத்தை நீக்குகிறது.

மற்றவர்களுக்கு ஹெபடைடிஸ் A பரவுவதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கு ஹெபடைடிஸ் A இருந்தால்:

  • உங்கள் கைகளை சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவி சுத்தமான துவாலையால் உலர்த்துங்கள்
  • மற்றவர்களுக்கு உணவு அல்லது பானம் தயாரிக்காதீர்கள்
  • சாப்பிடும் அல்லது குடிக்கும் பாத்திரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்
  • துணிகள் மற்றும் துடைக்கும் துவாலைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்
  • பாலியல் உறவு கொள்ளாதீர்கள்
  • சாப்பிடும் பாத்திரங்களை சோப்பு நீரில் கழவுங்கள் துவைக்கும் இயந்திரத்தில் துணிகள் மற்றும் துவாலைகளைத் துவையுங்கள்.

ஹெபடைட்டிஸ் A நோயால் பாதிக்கப்பட்ட அனைவரும், வேலைக்கோ அல்லது பாடசாலைக்கோ திரும்புவதற்கு முன் தங்களது மருத்துவருடன் ஆலோசிக்க வேண்டும்.

ஹெபடைட்டிஸ் A நோயை பிறருக்கு பரப்பும் அபாயம் அதிகம் உள்ள பின்வரும் நபர்கள், அவர்கள் வேலை அல்லது பாடசாலைக்கு திரும்புவதற்கு முன் கட்டாயமாக தங்களது மருத்துவரை சந்திக்க வேண்டும்:

  • உணவு அல்லது பானங்களை கையாளும் நபர்கள்
  • குழந்தைகளை பராமரிப்பாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் போன்ற நெருக்கமான உடல் தொடர்பு கொண்ட வேலைகளில் உள்ள நபர்கள்
  • குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு செல்லும் குழந்தைகள்.

ஹெபடைடிஸ் A எவ்வாறு கண்டறியப்படுகிறது?

நோயாளியின் அறிகுறிகளின் அடிப்படையில் மருத்துவர் ஹெபடைடிஸ் A-ஐக் கண்டறிவார், மேலும் உறுதி செய்ய ஹெபடைடிஸ் A பிறபொருளெதிரிகளுக்கான(antibodies)இரத்தப் பரிசோதனையை மேற்கொள்வார். சில சமயங்களில், ரத்தம் அல்லது மலத்தில் ஹெபடைட்டிஸ் A DNA பரிசோதனை (PCR ) பயன்படுத்தப்படலாம்.

‘ஹெபடைடிஸ் A’- இற்கு எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகிறது?

ஹெபடைடிஸ் A- இற்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை.

தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருடன் தொற்று ஏற்பட்டு இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசி அல்லது இம்யூனோகுளோபுலின் ஊசி போடப்பட்டால், நோய் வராமல் தடுக்கலாம். தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நபருடன் வீட்டில்வாழ்பவரகள் மற்றும் பாலியல் துணைவர்களுக்கு தடுப்பூசி அல்லது இம்யூனோகுளோபுலின் கொடுக்கவேண்டிய தேவை ஏற்படலாம்

ஹெபடைடிஸ் A-ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓய்வு, நிறைய திரவம் குடிப்பது மற்றும் நன்றாக சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது.

மது அருந்துவதைத் தவிர்ப்பது கல்லீரலில் ஏற்படும் அழுத்தத்தையும் குறைக்கும்.

பொது சுகாதார நடவடிக்கை என்ன?

 ‘ஹெபடைடிஸ் A’ தொற்று ஏற்பட்டவர்கள் பற்றிய விபரங்களை இரகசியப்பாதுகாப்பு பேணப்பட்ட விதத்தில் மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்கள் என்பன, உள்ளூர் பொது சுகாதார பிரிவுக்கு தெரிவிக்க வேண்டும். 

பொது சுகாதாரப் பிரிவு ஊழியர்கள் மருத்துவருடனும், நோயாளி மற்றும் நோயாளியின் குடும்பத்தினருடனும் இணைந்து பணியாற்றி, தொற்று அபாயத்தில் உள்ள நெருங்கிய தொடர்பிலுள்ளவர்களை அடையாளம் கண்டு, அபாயத்தில் உள்ளவர்கள் நோய் பற்றிய தகவல்களைப் பெறவும், தேவைப்பட்டால் தடுப்பு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்வார்கள்.    

குழந்தைப் பராமரிப்பு மையத்திற்கு  செல்லும் ‘ஹெபடைடிஸ் A’ உள்ளவர்கள் அல்லது அங்கு வேலை செய்பவர்கள் மற்றும் விற்பனைக்கான உணவைக் கையாள்பவர்கள் போன்றோரை நிர்வகிப்பதற்கான சிறப்பு வழிகாட்டுதல்களைப் பொது சுகாதாரப் பிரிவு ஊழியர்கள் பின்பற்றுகிறார்கள்.

பொது சுகாதார பிரிவு ஊழியர்கள் ஹெபடைடிஸ் A தொற்று பரவலை ஆராய்ந்து, நோய் பரவலுக்கான காரணத்தை அடையாளம் காணவும், அதன் பரவலைக் கட்டுப்படுத்தவும், மேலும் தொற்றுகளைத் தடுக்கவும் உதவுவார்கள்.

மேலதிக வளங்கள்

மேலதிக ஆலோசனைக்கு, இலவச மற்றும் ரகசிய மொழிபெயர்ப்பு மற்றும் உரைப்பெயர்ப்பு சேவையை (TIS) 131 450 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கவும். உங்கள் மொழியை சொல்லி நீங்கள் பின்வருபவர்களுடன்  பேசவிரும்புவதாக கூறுங்கள்:

  • 1300 066 055-இல் உங்கள் உள்ளூர் பொது சுகாதாரப் பிரிவு
  • இலவச 24 மணி நேர சுகாதார ஆலோசனைகளுக்கு 1800 022 222-இல் healthdirect-ஐ தொடர்புக்கொள்ளவும்
  • அல்லது, உங்கள் உள்ளூர் மருந்தக மருந்தாளரிடம் பேசவும்.

Current as at: Thursday 18 December 2025
Contact page owner: One Health