சால்மொனெல்லா(Salmonella) தகவல் தாள்

சால்மொனெல்லோசிஸ் என்பது சால்மொனெல்லா (Salmonella) எனும் பாக்டீரியாவால் ஏற்படும் நோயாகும். ஆஸ்திரேலியாவில், பெரும்பாலான சால்மொனெல்லா(Salmonella)  தொற்றுகள், மாசுபட்ட உணவுகளைச் சாப்பிட்ட பிறகு அல்லது இந்த தொற்றுள்ள மற்றொரு நபருடன் தொடர்பில் இருந்ததை அடுத்து ஏற்படுகிறது. இறைச்சி, கோழி மற்றும் முட்டைகளை நன்கு சமைப்பது உள்ளிட்ட உணவைப் பாதுகாப்பாகக் கையாளுதல் மற்றும் சிறந்த கைச் சுகாதாரம் போன்றவற்றின் மூலம் தொற்று ஏற்படுவதிலிருந்து தடுக்கலாம்.


Last updated: 02 December 2025

சால்மோனெல்லோசிஸ்(Salmonellosis) என்றால் என்ன?

Salmonellosis (அல்லது சால்மோனெல்லா) என்பது சால்மோனெல்லா எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு நோயாகும். ஆஸ்திரேலியாவில், பெரும்பாலான சால்மோனெல்லா தொற்றுகள் மாசுபட்ட உணவை சாப்பிட்ட பின்னர் அல்லது சில சமயங்களில் தொற்று உள்ள மற்றொரு நபருடன் தொடர்பு கொண்ட பின்னர் ஏற்படுகின்றன.

சால்மோனெல்லாவின் அறிகுறிகள் என்ன?

அறிகுறிகளாவன:

  • தலைவலி
  • காய்ச்சல்
  • வயிற்றுப் பிடிப்புகள்
  • வயிற்றுப்போக்கு
  • குமட்டல்
  • வாந்தி

அறிகுறிகள் பொதுவாக பாக்டீரியா தொற்று எற்பட்ட 6-72 மணி நேரத்திற்குப் பின்னர் ஆரம்பித்து 4-7 நாட்கள் வரை நீடிக்கும். சில நேரங்களில் நீண்ட காலம் நீடிக்கும்.

சால்மோனெல்லா எவ்வாறு பரவுகிறது?

சால்மோனெல்லா பொதுவாக தொற்றுக்குள்ளான விலங்குகள் (உதாரணமாக, சரியாக வேகாத இறைச்சி, கோழி மற்றும் விலங்குகளில் இருந்து பெறப்படும் முட்டை போன்றவை) மூலம் தயாரிக்கப்படும் சரியாக வேகாத உணவை சாப்பிடுவதன் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது.

சால்மோனெல்லா பின்வரும் வழிகளிலும் பரவலாம்:

  1. மாசுபட்ட ஒரு பொருளுடன் கலப்படமாக்குதல் - மாசுபட்ட உணவில் இருந்து வரும் சால்மோனெல்லா மற்ற உணவுகளுக்கு பரவுவதை இது குறிக்கும். உதாரணமாக, சால்மோனெல்லாவால் மாசுபட்ட உணவை வெட்ட பயன்படுத்திய கத்தியை பிறிதொரு மேலும் சமைக்காத உணவுப்பொருளை வெட்ட பயன்படுத்தினால், அந்த சமைக்கப்படாத புதிய உணவில் சால்மோனெல்லா வளரும்.
  2. நபருக்கு நபர் - கைகள் சரியாகக் கழுவப்படாவிட்டால், குறிப்பாக உணவு தயாரிக்கும் போது. இது விலங்குகளிடமிருந்தும் மனிதர்களுக்கு பரவலாம்.

சால்மோனெல்லா ஏற்படும் அபாயத்தில் உள்ளவர்கள் யார்?

யாருக்கு வேண்டுமானாலும் சால்மோனெல்லா வரலாம். கைக்குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கடுமையான நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சால்மோனெல்லாவை எவ்வாறு தடுப்பது?

சமைத்தல்

உணவை நன்றாக சமைப்பது சால்மோனெல்லாவைக் கொல்லும். பச்சையாகவோ அல்லது பூரணமாக சமைக்காத இறைச்சி, கோழி அல்லது முட்டைகளைத் தவிர்க்கவும். கோழி மற்றும் இறைச்சி - ஹாம்பர்கர்கள், ‘சாசேஜ்’கள் (sausages)மற்றும் உருட்டப்பட்ட ரோஸ்ட்கள் (rolled roasts)போன்றவை - நடுவில் இளஞ்சிவப்பு நிறம் இல்லாதபடி சமைக்கப்பட வேண்டும்.

கை கழுவுதல்

கழிப்பறைக்குச் சென்று திரும்பியபின், நப்பிகள்(nappies)மாற்றிய பின், விலங்குகளைத் தொட்ட பின், உணவைக் கையாளுவதற்கு முன்பும் பின்பும், சாப்பிடுவதற்கு முன்பும் குறைந்தது 20 வினாடிகள் சோப்பு மற்றும் தண்ணீரில் உங்கள் கைகளை எப்போதும் நன்கு கழுவுங்கள். குறிப்பாக விரல் நகங்களுக்குக் கீழும் விரல்களுக்கு இடையிலும் சுத்தம் செய்வது முக்கியம்.

தொற்றுக்குள்ளான உணவு கையாளுபவர்கள் பாக்டீரியாவை எளிதில் பரப்பலாம். வயிற்றுப்போக்கு நின்ற 48 மணி நேரம் வரை அவர்கள் உணவைக் கையாளவோ பரிமாறவோ கூடாது.

வெப்பநிலை கட்டுப்பாடு

உணவை முறையாக சேமித்து வைக்காமை பாக்டீரியா வளர அனுமதிக்கும்.

மாசுபடுவதைத் தடுக்க:

  • குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் உணவுகளை ஐந்து பாகை செல்சியஸுக்குக் குறைவான குளிரில் வைத்திருங்கள்
  • சூடான உணவுகளை 60 பாகை செல்சியஸுக்கு மேல் வைத்திருங்கள்
  • மீள சூடாக்கும் உணவின் அனைத்துப் பகுதிகளும் ஆவிச்சூடு வரும்வகையில் விரைவாக சூடாக்க வேண்டும்
  • உறைந்த உணவுகளை குளிர்சாதன பெட்டி அல்லது மைக்ரோவேவ் மூலம் உறைநிலையை கரைக்கலாம்

உணவுகளை அறை வெப்பநிலையில் எவ்வளவு நேரம் வைக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அதிகமாக சால்மோனெல்லா பெருகும்.

உணவு கையாளுதல் மற்றும் மாசுபடுதல்

உணவு மாசுபடுவதைத் தடுக்க:

  • பச்சை உணவுகளை (இறைச்சி போன்றவை) இறுக மூடப்பட்ட கொள்கலன்களில் அடைத்து சாப்பிடத் தயாராக உள்ள மற்ற உணவுகளில் திரவம் சொட்டுவதையோ அல்லது சிந்துவதையோ தடுக்க குளிர்சாதன பெட்டியின் அடிப்பகுதியில் அல்லது உறைவிப்பான்(freezer) இல் வைக்கவும்.
    உணவு மாசுபடாமல் பாதுகாக்க
    குளிர்சாதன பெட்டியிலும் மற்றும் உறைவிப்பான் (freezer )-இலும் உள்ள அனைத்து உணவுகளையும் மூடி வைக்கவும்.
  • சமைக்காத உணவுகள் மற்றும் சாப்பிடத் தயாராக இருக்கும் உணவுகளைத் தயாரிக்கும்போது வெவ்வேறு நறுக்கும் பலகைகள், பாத்திரங்கள் மற்றும் தட்டுகளைப் பயன்படுத்தவும். உங்களிடம் ஒரே ஒரு நறுக்கும் பலகை மட்டும் இருந்தால், மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு சூடான சோப்பு நீரில் நன்றாகக் கழுவவும். 
  • சமைக்காத காய்கறிகள் மற்றும் பழங்களைத் தயாரிப்பதற்கும் உண்பதற்கும் முன்பு அவற்றின் அழுக்குகளை நன்கு கழுவிக்கொள்ளவும்.
  • கைகள் அல்லது மேஜைகளைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் துணியிலிருந்து வேறுபட்ட துணியால் பாத்திரங்களை உலர வைப்பதோடு பாத்திரம் உலர்த்தும் துணிகளைத் கிரமமாக துவைக்கவும்.

சால்மோனெல்லா எவ்வாறு கண்டறியப்படுகிறது?

உங்களுக்கு சால்மோனெல்லா இருக்கிறதா என்பதை மருத்துவர் மல(poo) மாதிரியைப் பரிசோதித்து தெரிவிப்பார்.

சால்மோனெல்லாவிற்கு எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகிறது?

பெரும்பாலான மக்கள் அதிக ஓய்வு எடுப்பதன் மூலமும், தண்ணீர் அல்லது வாய்வழி நீரேற்றுப் பானங்கள் (உங்கள் மருந்தாளரிடமிருந்து) போன்ற ஏராளமான திரவங்களை குடிப்பதன் மூலமும் குணமடைகிறார்கள். பெரும்பாலான மக்கள் ஒரு வாரத்திற்குள் குணமடைவார்கள்.

நீங்கள் உங்கள் மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய நிலைகள்:

  • அறிகுறிகள் சில நாட்களுக்கும் மேலாக நீடித்தால்
  • வயிற்றுப்போக்கு தீவிரமாக இருந்தால் அல்லது இரத்தம் கலந்து வந்தால்
  • நீங்கள் தீவிர சால்மோனெல்லா ஆபத்திற்கு ஆளாக்க கூடியவராக இருந்தால் (சிறுவர்கள், வயோதிபர்கள், மற்றும் குறைந்த நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள்)
  • உங்களுக்குக் கவலைக் கரிசனை இருந்தால்

பெரும்பாலான நபர்களுக்கு நுண்ணுயிர்எதிர்ப்பிகள்(ஆன்டிபயோட்டிக்ஸ் -Antibiotics)தேவைப்படாது.
ஆனால் சில நேரங்களில், சிறுவர்கள் அல்லது வயது மூதிந்தவர்களுக்கு நுண்ணுயிர்எதிர்ப்பிகள்(ஆன்டிபயோட்டிக்ஸ் -Antibiotics ) பரிந்துரைக்கப்படலாம்.  சில நபர்கள், மருத்துவமனையில் சேர்க்கப்படவேண்டிய அவசியம் ஏற்படலாம்.

சால்மொனெல்லா(Salmonella)  தொடர்பான பொது சுகாதார பதில் நடவடிக்கைகள் என்ன?

ஆய்வகங்கள், சால்மொனெல்லா(Salmonella)  தொற்று கண்டறியப்படும் ஒவ்வொரு நிகழ்வையும் உள்ளூர் பொது சுகாதார பிரிவிற்கு அறிவிக்க வேண்டும்.  பொது சுகாதார பிரிவுகள், பொதுவான தொடர்புகளை கண்டறிய ஒரே நேரத்தில் நிகழும் பல தொற்று நிகழ்வுகளை விசாரித்து ஆராய்கின்றன.  ஒரே வகை உணவுடன் தொடர்பு கண்டறியப்பட்டால், NSW உணவு ஆணையம் (NSW Food Authority) மேலதிக சுற்றுச்சூழல் விசாரணை நடத்தி, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த தொற்று சம்பந்தமான புள்ளிவிவரங்கள், தடுப்பு நடவடிக்கை உத்திகள் உருவாக்குவதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

சால்மோனெல்லோசிஸ் மற்றும் பிற உணவு மூலம் பரவும் தொற்றுகளைத் தடுப்பதற்கான பல்வேறு உணவுப் பாதுகாப்பு உத்திகளுக்கு NSW உணவு ஆணையம் பொறுப்பாகும்.

மேலதிக வளங்கள்

உங்களுக்கு சால்மொனெல்லா (Salmonella)  அறிகுறிகள் இருப்பதாக எண்ணினால் உடனடியாக உங்கள் மருத்துவருடன் பேசுங்கள்,அல்லது
அவசர நிலை ஏற்பட்டால் (000) மூன்று பூஜ்ஜியங்கள் என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும்.

மேலதிக ஆலோசனைக்கு, இலவச மற்றும் ரகசிய மொழிபெயர்ப்பு மற்றும் உரைப்பெயர்ப்பு சேவையை (TIS) 131
450 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கவும்.
உங்கள் மொழியை சொல்லி நீங்கள் பின்வருபவர்களுடன்  பேசவிரும்புவதாக கூறுங்கள்:

  • 1300 066 055-இல் உங்கள் உள்ளூர் பொது சுகாதாரப் பிரிவு
  • இலவச 24 மணி நேர சுகாதார ஆலோசனைகளுக்கு 1800 022 222-இல் Healthdirect-ஐ தொடர்புக்கொள்ளவும்

அல்லது, உங்கள் உள்ளூர் மருந்தக மருந்தாளரிடம் பேசவும்.


Current as at: Tuesday 2 December 2025
Contact page owner: One Health