டைபாய்டு (Typhoid) மற்றும் பாராடைபாய்டு (paratyphoid) தகவல் தாள்

இரண்டு வெவ்வேறு வேறுபட்ட ஆன்டிஜன் அடையாளங்களைக் கொண்ட(serotypes) சால்மோனெல்லா பாக்டீரியாவினால் டைபாய்டு (Typhoid) ஏற்படுகிறது.  மோசமான சுகாதாரம் அல்லது சுத்திகரிக்கப்படாத குடிநீர் உள்ள நாடுகளில் இது பொதுவானது.  வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பார்க்கச் செல்லும் மக்களுக்கு டைபாய்டு (Typhoid) தடுப்பூசி தீவிரமாக பரிந்துரைக்கப்படுகிறது.

Last updated: 18 December 2025

டைபாய்டு (Typhoid) மற்றும் பாராடைபாய்டு (paratyphoid)என்றால் என்ன?

டைபாய்டு (Typhoid) மற்றும் பாராடைபாய்டு (paratyphoid) ஆகியவை இரண்டு வெவ்வேறு வகையான சால்மோனெல்லா பாக்டீரியாவால் ஏற்படும் நோய்களாகும். இந்த நோய்கள் இரண்டும் ஒரே மாதிரியான உடல்நலமின்மையை ஏற்படுத்துகின்றன. பாராடைபாய்டு (paratyphoid) தொற்றுகள் டைபாய்டை விட குறைவான தீவிரம் கொண்டதும் அரிதானதாகவும் காணப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில், பெரும்பாலான டைபாய்டு (Typhoid) மற்றும் பாராடைபாய்டு (paratyphoid) தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து பெறப்படுகின்றன. இந்த நோய்கள் ஆஸ்திரேலியாவில் அரிதானவை.

இந்த தொற்றுகள் சால்மோனெல்லாவின் பிற வகைகளால் ஏற்படும் தொற்றுகளிலிருந்து வேறுபட்டவை, இது பொதுவாக இரைப்பை குடல் அழற்சியை (gastro) ஏற்படுத்துகிறது.

டைபாய்டு (Typhoid) மற்றும் பாராடைபாய்டு (paratyphoid) அறிகுறிகள் என்ன?

மக்களுக்கு லேசான அல்லது கடுமையான அறிகுறிகள் ஏற்படலாம்.  அறிகுறிகள் பின்வருமாறு இருக்கலாம்:

  • நீண்ட காய்ச்சல்
  • வியர்வை
  • கடுமையான தலைவலி
  • பொதுவாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பது
  • வயிற்று வலிகள்
  • வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல்
  • பசியின்மை மற்றும் எடை இழப்பு.

டைபாய்டு (Typhoid) நோயின் அறிகுறிகள் பொதுவாக தொற்றுக்கு பின் 8 முதல் 14 நாட்களில் தோன்றும். தொற்று ஏற்பட்டதற்கு பிறகு அறிகுறிகள் குறைந்தபட்சம் 3 நாட்களில் அல்லது அதிகபட்சம் 60 நாட்களுக்குப் பிறகும் தோன்றலாம்.  பாராடைபாய்டு (paratyphoid) நோயின் அறிகுறிகள் பொதுவாக 1 முதல் 10 நாட்களுக்குள் தோன்றுகின்றன.

சிகிச்சையளிக்கப்படாவிட்டால், டைபாய்டு (Typhoid) மற்றும் பாராடைபாய்டு (paratyphoid) உயிருக்கு ஆபத்தானவையாக அமையலாம். அறிகுறிகள் தோன்றியவுடன் மருத்துவருடன் பேசுவது முக்கியம்.

பெரும்பாலான மக்கள் சிகிச்சை பெற்றதும் பல வாரங்களுக்குள் முழுமையாக குணமடைவார்கள், அறிகுறிகள் பொதுவாக ஒரு வாரத்தில் நின்றுவிடும்.

சிலருக்கு எந்தவிதமான நோயின் அறிகுறிகள் இல்லாவிட்டாலும் கூட ஒரு வருடத்திற்கும் மேலாக மலம் மற்றும்/அல்லது சிறுநீரில் பாக்டீரியாக்கள் இருக்கும்.  இந்த நபர்கள் காவிகள்(carriers) என்று அழைக்கப்படுவதோடு மற்றவர்களுக்கு தொற்றை ஏற்படுத்தகூடியவர்கள்.

டைபாய்டு (Typhoid) மற்றும் பாராடைபாய்டு (paratyphoid) எவ்வாறு பரவுகின்றன?

மோசமான சுகாதார வசதி, மோசமான கை சுகாதாரம், உணவு கையாளும் தரநிலைகள் மற்றும் சுத்திகரிக்கப்படாத குடிநீர் போன்றன உள்ள நாடுகளில் டைபாய்டு (Typhoid) பொதுவாக காணப்படுகிறது.

டைபாய்டு (Typhoid) மற்றும் பாராடைபாய்டை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் பாதிக்கப்பட்ட நபர்களின் மலத்திலும் (poo) சில சமயங்களில் அவர்களின் சிறுநீரிலும் காணப்படுகின்றன.

மல மாசுபட்ட உணவு அல்லது தண்ணீரை, சாப்பிடுவதன் மூலம்  அல்லது குடிப்பதன் மூலம் டைபாய்டு (Typhoid) மற்றும் பாராடைபாய்டு (paratyphoid) பரவுகிறது. ஈக்கள் பாக்டீரியாவை உணவுக்கு கடத்தக்கூடும், அல்லது உணவுபொருட்கள் மாசுபட்ட தண்ணீரில் வளர்க்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு அல்லது சேமிக்கப்பட்டிருந்தால்.

வளர்ச்சியடையாத நாடுகளில், சமைக்கப்படாத பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் மட்டி மீன் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

டைபாய்டு (Typhoid) மற்றும் பாராடைபாய்டு (paratyphoid) வருவதற்கான அபாயத்தில் உள்ளவர்கள் யார்?

ஆஸ்திரேலியாவில், டைபாய்டு (Typhoid) மற்றும் பாராடைபாய்டு (paratyphoid) பெரும்பாலும் இந்த நோய்கள் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு பயணம் செய்பவர்களில் மட்டுமே காணப்படுகின்றன. 

வளரும் நாடுகளுக்கு (குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம்) நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க பயணிப்பவர்களுக்கு இந்த நோயை பெற்றுக்கொள்வதற்கான அதிக ஆபத்து உள்ளது.

பாதிக்கப்பட்ட நபருடன் வசிப்பவர்கள், அல்லது டைபாய்டு (Typhoid) அல்லது பாராடைபாய்டு (paratyphoid) பாதிப்புள்ளான நபருடன் பயணம் செய்தவர்கள், டைபாய்டு (Typhoid) பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்.

அறிகுறிகள் காணப்படுபவர்கள் தங்கள் குடும்ப மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

டைபாய்டு (Typhoid) மற்றும் பாராடைபாய்டு (paratyphoid) எவ்வாறு தடுக்கப்படுகிறது?

டைபாய்டு (Typhoid) மற்றும் பாராடைபாய்டு (paratyphoid) பொதுவாக உள்ள நாடுகளுக்குச் செல்லும் மக்கள் செய்ய வேண்டியவை:

  • கழிவறைக்குச் சென்ற பிறகும், சாப்பிடுவதற்கு முன்பும் குறைந்தது 20 வினாடிகள் சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை நன்கு கழுவ வேண்டும். 
  • பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்பட சமைக்கப்படாத உணவுகளைத் தவிர்க்கவும் (நீங்களே தோலை உரிக்கக்கூடியதாக இருந்தால் அன்றில்)
  • போத்தல் அல்லது கொதிக்கவைத்த தண்ணீரைப் பாவிக்கவும் (பல் துலக்கும் போது கூட)
  • பனிக்கட்டி மற்றும் தண்ணீரைக் கொண்டு கலந்த பானங்கள் உட்பட சுத்திகரிப்புக்குள்ளாகாத தண்ணீரைக் குடிக்கக்கூடாது.
  • தெருக்கடை உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்
  • சூடான உணவுகள் நன்கு சமைக்கப்பட்டு, சூடாக இருக்கும் போதே சாப்பிடப்படுவதை உறுதி செய்யவும்.

டைபாய்டு (Typhoid) மற்றும் பாராடைபாய்டு (paratyphoid) பொதுவாக உள்ள நாடுகளுக்குச் செல்லும் இரண்டு வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் டைபாய்டு (Typhoid) தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.

பாராடைபாய்டுக்கு (paratyphoid) தடுப்பூசி இல்லை.

டைபாய்டு (Typhoid) அல்லது பாராடைபாய்டு (paratyphoid) உள்ளவர்கள், அல்லது டைபாய்டு (Typhoid) பாதிக்கப்பட்ட ஒருவருடன் வீட்டைப் பகிர்ந்து கொள்பவர்கள்:

  • அவர்கள் இன்னும் தொற்றுநோய்க்குள்ளானவராக இருக்கிறார்களா இல்லையா என்பதைக் கண்டுகொள்ள பல மலப் பரிசோதனைகளை செய்ய வேண்டியிருக்கும்.
  • அவர்களின் வேலை, உணவு கையாளுதல் அல்லது குழந்தைகள், நோயாளிகள் அல்லது முதியவர்களை பராமரிப்பது சம்பந்தப்பட்டதாக இருந்தால், அவர்கள் வேலைக்குத் திரும்ப முடியும் என்று உள்ளூர் பொது சுகாதாரப் பிரிவு அறிவுறுத்தும் வரை வேலைக்கு செல்லக்கூடாது.
  • மல மாதிரிகள் தொற்று இல்லை என்பதைக் காட்டும் வரை மற்றவர்களுக்கு உணவு தயாரிக்கக்கூடாது.

டைபாய்டு (Typhoid) மற்றும் பாராடைபாய்டு (paratyphoid) எவ்வாறு கண்டறியப்படுகிறது?

டைபாய்டு (Typhoid) மற்றும் பாராடைபாய்டைக் (paratyphoid)  கண்டறிய, உங்கள் மருத்துவர் அல்லது உள்ளூர் மருத்துவமனை இரத்தம் அல்லது மல மாதிரியை பரிசோதிப்பர்.

டைபாய்டு (Typhoid) மற்றும் பாராடைபாய்டிற்கு (paratyphoid) எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகிறது?

டைபாய்டு (Typhoid) மற்றும் பாராடைபாய்டுக்கு (paratyphoid)  நுண்ணுயிர் எதிர்ப்பிகள்(antibiotics) மூலம் சிகிச்சையளிக்க முடியும். அறிகுறிகள் இல்லாத ஆனால் டைபாய்டு (Typhoid) அல்லது பாராடைபாய்டு (paratyphoid) உள்ளவர்களாக இருக்கக்கூடியவர்களுக்கு சிகிச்சையளிக்க நுண்ணுயிர் எதிர்ப்பி (antibiotic) சிகிச்சை தேவைப்படுகிறது.

அறிகுறிகள் கடுமையாக இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கலாம்.

பொது சுகாதார பதில் நடவடிக்கை என்ன?

மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்கள் டைபாய்டு (Typhoid) அல்லது பாராடைபாய்டு (paratyphoid) தொடர்பான விபரங்களை உள்ளூர் பொது சுகாதாரப் பிரிவுக்குத் தெரிவிக்க வேண்டும்.

பொது சுகாதாரப் பிரிவு ஊழியர்கள், தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் கண்டறிய மருத்துவர் அல்லது நோயாளியை (அல்லது பராமரிப்பாளர்களை) நேர்காணல் செய்வார்கள்.

டைபாய்டு (Typhoid) அல்லது பாராடைபாய்டு (paratyphoid) உள்ள உணவு கையாளுபவர்களின் சுற்றுச்சூழல் விசாரணைக்கு NSW சுகாதாரத்துடன் இணைந்து NSW உணவு ஆணையம் பொறுப்பாகும்

வேலை மற்றும் பாடசாலையிலிருந்து விலகியிருத்தல் குறித்து உங்கள் உள்ளூர் பொது சுகாதாரப் பிரிவு மேலும் ஆலோசனை வழங்க முடியும். வேலை விலக்கிற்குள்ளானவர்கள், மீண்டும் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, பல மலப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.

மேலதிக வளங்கள்

மேலதிக ஆலோசனைக்கு, இலவச மற்றும் ரகசிய மொழிபெயர்ப்பு மற்றும் உரைப்பெயர்ப்பு சேவையை (TIS) 131 450 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கவும். உங்கள் மொழியை சொல்லி நீங்கள் பின்வருபவர்களுடன்  பேசவிரும்புவதாக கூறுங்கள்:

  • 1300 066 055-இல் உங்கள் உள்ளூர் பொது சுகாதாரப் பிரிவு
  • இலவச 24 மணி நேர சுகாதார ஆலோசனைகளுக்கு 1800 022 222-இல் healthdirect-ஐ தொடர்புக்கொள்ளவும்
Current as at: Thursday 18 December 2025
Contact page owner: One Health