காட்டுக் காளான் விஷம்

காட்டுக் காளான்களை சாப்பிடுவது உங்களை மிகவும் நோய்வாய்ப்படுத்தலாம் அல்லது உங்களைச் சாகடிக்கவும் கூடும்.. எந்த காட்டுக் காளான்கள் விஷத்தன்மை கொண்டவை என்பதைக் கூற எளிதான வழி இல்லை.

நம்பகமான பல்பொருள் அங்காடி, மளிகைக் கடை அல்லது சந்தையில் இருந்து கிடைக்கும் காளான்களை மட்டுமே சாப்பிடுங்கள்.

நீங்களோ அல்லது வேறு யாராவதோ விஷக் காளான் சாப்பிட்டிருப்பதாக நீங்கள் நினைத்தால்:

  • எந்த நேரத்திலும் 13 11 26 என்ற எண்ணில் விஷங்கள் பற்றியத் தகவல் மையத்தை உடனடியாக அழைக்கவும் - அறிகுறிகளுக்காகக் காத்திருக்க வேண்டாம்.
  • அவசரகாலத்தில், மூன்று பூஜ்யம் (000) எண்ணை அழைக்கவும் அல்லது அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும்.
Last updated: 27 March 2026

​காளான் விஷம் என்றால் என்ன?

சில காட்டுக் காளான்களில் விஷத்தன்மைகள் உள்ளன, அவற்றை நீங்கள் சாப்பிட்டால் உங்களை நோய்வாய்ப்படுத்தலாம். இது காளான் விஷம் என்று அழைக்கப்படுகிறது. நியூ சவுத் வேல்ஸில் உள்ள மிகவும் ஆபத்தான காளான் வகைகளில் ஒன்று ‘டெத் கேப்’ காளான் - Death Cap mushroom  (Amanita phalloides). ‘டெத் கேப்’ காளான்களைச் (Death Cap mushroom) சாப்பிடுவது உங்களைச் சாகடிக்கக்கூடும்.

விஷத்தன்மை கொண்ட காட்டுக் காளான்களை உண்ணக்கூடியவை என்று தவறாக நினைப்பதால் மக்கள் பெரும்பாலும் காளான் விஷத்திற்கு ஆளாகிறார்கள். எடுத்துக்காட்டாக, ‘டெத் கேப்’ காளான்கள் நெல் வைக்கோல் காளான்கள் - Paddy Straw mushrooms (Volvariella volvacea) போல இருக்கும்.

காளான்களைச் சமைப்பதாலோ, ஊறவைப்பதாலோ, உரிப்பதாலோ அல்லது உலர்த்துவதாலோ விஷத்தன்மை நீங்காது.

காளான் விஷத்தின் அறிகுறிகள்

பொதுவான அறிகுறிகளில் பின்வருவன அடங்கும்:

  • குமட்டல்
  • வாந்தி
  • வயிற்று வலி அல்லது பிடிப்புகள்
  • வயிற்றுப்போக்கு
  • மனப் பிரமைகள்.

சில காளான்கள் கல்லீரல் அல்லது சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்தும்.

காளானை உட்கொண்ட 30 நிமிடங்கள் முதல் 24 மணி நேரத்தில் நீங்கள் நோய்வாய்ப்படலாம். காளானின் வகை, அதை நீங்கள் எவ்வளவு சாப்பிட்டீர்கள் மற்றும் உங்கள் பொது ஆரோக்கியத்தைப் பொறுத்து அந்த நேரம் மாறுபடும்.

யாருக்கு ஆபத்து உள்ளது?

எவரும் காளான் விஷத்தால் பாதிக்கப்படலாம்.

சிறு குழந்தைகள்தான் அதிக ஆபத்தில் உள்ளனர், ஏனென்றால் அவர்கள் பெரும்பாலும் பொருட்களைத் தங்கள் வாயில் போட்டுக் கொள்கிறார்கள் - இதில் தோட்டத்திலோ அல்லது பூங்காவிலோ உள்ள காட்டுக் காளான்களும் அடங்கும்.

உங்களையும் மற்றவர்களையும் எவ்வாறு பாதுகாப்பது

  • நம்பகமான பல்பொருள் அங்காடி, மளிகைக் கடை அல்லது சந்தையில் இருந்து கிடைக்கும் காளான்களை மட்டுமே சாப்பிடுங்கள்.
  • காட்டுக் காளான்களைச் சாப்பிட வேண்டாம்.
  • உங்கள் தோட்டம் மற்றும் உள்ளூர் பூங்காக்களில் காளான்கள் இருக்கின்றனவா என்பதைச் சரிபார்த்து, குழந்தைகள் வெளியே விளையாடுவதற்கு முன்பு அவற்றை அகற்றவும்.

யாராவது காட்டுக் காளான் சாப்பிட்டிருப்பதாக நீங்கள் நினைத்தால் என்ன செய்வது

13 11 26 என்ற எண்ணில் உடனடியாக விஷங்கள் பற்றியத் தகவல் மையத்தை அழைக்கவும் (வாரத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களும் உண்டு). அறிகுறிகளுக்காகக் காத்திருக்க வேண்டாம்.

உங்களுக்கு முடிந்தால், காளானை அடையாளம் காண உதவும் வகையில் அதன் புகைப்படம் அல்லது மாதிரியை எடுத்துக் கொள்ளுங்கள்.

அவசரகாலத்தில், மூன்று பூஜ்யம் (000) எண்ணை அழைக்கவும் அல்லது அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும்.
Contact page owner: Environmental Health